அரண்மோர் அரண்மனை என அறியப்பட்ட தமிழ்நாடு அரசினுடைய விருந்தினர் மாளிகையானது உயர்திரு ஜோத்பூர் மகாராஜாவிற்கு சொந்தமானது. 1925-ஆம் ஆண்டு 36 ஏக்கர் நிலப்பரப்பில் கட்டப்பட்டு, பரந்து காணப்படும் இம்மாளிகை 1958 - ஆம் ஆண்டு தமிழக அரசால் விலைக்கு வாங்கப்பட்டது.

ஊட்டி இரயில் நிலையம் மற்றும் மத்திய பேருந்து நிலையத்திலிருந்து 2.8 கி.மீ தொலைவில் அமைந்துள்ள இம்மாளிகையானது, பழைமை வாய்ந்த கட்டக்கலை, பசுமையான புல்வெளிகள் மற்றும் உயர் வசதிகள் கொண்ட அறைகளை உள்ளடக்கியது ஆகும். இவ்விருந்தினர் மாளிகையின் முதன்மை நோக்கம் பணிநிமித்தமாக நீலகிரிக்கு வரும் அரசு அதிகாரிகளுக்கு உயர்ரக தங்கும் வசதிகளை செய்து கொடுப்பதாகும்.

நூறு ஆண்டு கால மெட்ராஸ் (தற்போது தமிழ்நாடு) சட்ட மன்ற வரலாற்றில், ஒரே ஒரு முறை சட்டமன்ற பேரவைச் கூட்டம் மெட்ராஸ் சட்ட மன்றத்திற்கு (தற்போது சென்னை) வெளியே ஏப்ரல் 1959-ல் நடத்தப்பட்டது, அச்சட்டமன்ற கூட்டம் அரண்மோர் அரண்மனை (தற்பொழுது தமிழகம் விருந்தினர் மாளிகை) ஊட்டியில் 1959 – ஆம் ஆண்டு ஏப்ரல் 20 முதல் ஏப்ரல் 30 வரை நடத்தப்பட்டது. முன்னர் ஜோத்பூர் அரண்மனை என்றழைக்கப்பட்ட இம்மாளிகையில் உள்ள வழவழப்பான தரையமைக்கப்பட்ட நடனமாடும் அறையானது, 180 பேர் அமரக்கூடிய இருக்கைகள் கொண்ட சட்டமன்ற பேரவையாக தரம் உயர்த்தப்பட்டு இன்று வரலாற்றுச் சிறப்பு மிக்க இடமாக தமிழக வரலாற்றில் இடம் பெற்றுள்ளது.